கோவிலுக்கு வழி :
திருக்கதம்பநூர் எனும் இந்த திவ்ய ஷேத்திரம் திருச்சியிலிருந்தும் ஸ்ரீரங்கதிலிருந்தும் திருவெள்ளறை செல்லும் வழியில் அமைந்துள்ளது.
மூலவர் : புருஷோத்தமன், புஜங்க சயனம், கிழக்கே திரு முக மண்டலம்.
தாயார் : பூர்வாதேவி, பூர்ணவல்லி.
தீர்த்தம் : கதம்ப தீர்த்தம்
ஸ்தல வ்ருக்ஷம் : கதலீ வ்ருக்ஷம் ( வாழை மரம் )
விமானம் : உத்யோக விமானம்
ப்ரத்யக்ஷம் : கதம்ப முனி, திருமங்கையாழ்வார், உபரி ஸரவஸூ, ஸநக ஸநந்தந ஸநத் குமாரர்கள்.
ஸ்தல விசேஷங்கள்:
முன்னொரு காலத்தில் தன்னை போல ஐந்து தலைகள் ப்ரம்ஹ தேவனுக்கும் உள்ளது சகியாமல் சிவா பெருமான், ப்ரஹ்மநின் ஐந்தாவது தலையை கிள்ளி எறிந்தார். அதனால், சிவனுக்கு ப்ரஹ்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தின் காரணமாக கபாலம் ஒன்று அவரது கையில் ஒட்டி கொண்டது. சாபம் தீர்க்க சிவன், விஷ்ணுவை வேண்டினார். விஷ்ணுவும் மனமிரங்கி, சிவன் கையில் ஒட்டிக்கொண்ட கபாலத்தில் மகாலக்ஷ்மியைக் கொண்டு பிக்க்ஷையிட செய்து சிவனின் சாபத்தை தீர்த்தார்.
சிவன், விஷ்ணு, ப்ரஹ்மன், மூவரும் தத்தம் தேவியருடன் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளனர்.
இந்த ஷேத்திரத்தில் சிவ பெருமான், பிக்க்ஷாடன மூர்த்தியாக தம் குடும்பத்தோடு எழுந்தருளிருப்பது கூடுதல் சிறப்பாகும். எனவே இத்தலத்திற்கு பிக்க்ஷாண்டார் கோவில் என்னும் பெயரும் உண்டு.
கதம்ப முனிவருக்கு பிரத்யக்ஷமாய் இங்கு பெருமாள் எழுந்தருளிருப்பதால், இத்தலத்திற்கு கதம்ப ஷேத்திரம் எனும் சிறப்பு பெயரும் உண்டு. மேலும் மும்மூர்த்திகளும் ஒரு சேர காட்சி அளிப்பதால், இவ்வூர் கடம்ப ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டதாகவும் சிலர் கூறுவர்.
ஆவணி மற்றும் சித்திரை மாதங்களில் நடக்கும் உற்சவங்கள் இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவை.