நடு நாட்டுத் திருப்பதிகளில் முதன்மையான இந்த திவ்ய ஷேத்திரம், கடலூர் நகரத்திலிருந்து சுமார் 5 கி மீ தொலைவில் உள்ளது. மேலும் சென்னை-திருச்சி மெயின் லைன் இல் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்திலிருந்து மேற்கில் 3 மைலில் உள்ளது.
ஸ்தல வரலாறு:
ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடும்போர் மூண்டு யுத்தத்தில் அசுரர்கள் வென்றனர். தோல்வி கண்ட தேவர்கள், நாராயணனை துதித்து உதவி புரிய வேண்டுமென்று விண்ணப்பிக்க, அவர்களுக்கு உதவ எண்ணி, பெருமாள் அசுரர்களுடன் போரிட்டு தனது சக்ராயுதத்தால் சகல அசுரர்களையும் அழித்தார்.
அச்சமயம் அசுரர்களுக்கு உதவ வந்த சிவன் சக்ராயுதத்திற்கு எதிராக தனது சூலாயுதத்தை ஏவ, அதுவும் சக்ரத்திற்கு எதுவாக அதற்க்கு ஓர் அணிகலன் போல் நின்றது. அதை அடுத்து, பெருமாள் சிவனுக்கு தனது மும்மூர்த்தி வடிவத்தை காண்பித்தார். இதைக் கண்ட அரன், பெருமாளை துதிக்க எம்பெருமான் சாந்தமுற்று எல்லோருடைய வேண்டுகோளின்படி அவ்விடத்திலேயே கோவில் கொண்டு அருள்பாலித்தார்.
அவ்வமயம் தாக சாந்திக்கு நீர் கேட்க, கருடன் ஆகாயத்தின் மீது பறந்து விரஜா தீர்த்தத்தையும் , ஆதிசேஷன் தரை இறங்கி பூமியை பிளந்து பாதாள கங்கை தீர்த்தத்தையும் கொணர்ந்தனர். இறைவனும் தாகம் தீர்ந்தார்.
இவ்வாறு ஆதிசேஷனால் திருவாகிய பூமியை வகிண்டு நீர் கொண்டு வரப்பட்டதால், திரு+வகிண்ட+நீர் = திருஹிந்தபுரம் எனப் பட்டது.
மூலவர்:
தெய்வ நாயகன், கிழக்கு நோக்கி திரு முக மண்டலம், நின்ற திருக்கோலம். தேவர்க்கு நாதனாக இருந்து, எம்பெருமான் யுத்தம் செய்தமையால் தேவ நாதன் என்றும் அழைக்கப்பட்டார்.
உற்சவர்:
மூவராகிய ஒருவன், தேவ நாதன், திவிஷந்நாதன், விபுதநாதன், தாசசத்தியன், அடியவர்க்கு மெய்யன்.
தாயார்:
வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜவல்லித் தாயார். பார் அனைத்தையும் காக்கும் தன்மையால் பார்கவி என்றும் திரு நாமம் பெற்றார்.
விமானம்:
சந்திர விமானம், சுத்த சத்வ விமானம்.
காட்சி கண்டவர்கள்:
கருடன், ஆதிசேஷன், அரன், தேவாசுரர்கள்.
தீர்த்தம்:
கருட நதி, சந்திர தீர்த்தம், சேஷ தீர்த்தம்.
ஸ்தல விசேஷங்கள்:
கோவிலுக்கு அருகில் ஔஷதகிரி என்ற குன்றின் மேல் ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ளார். கோவிலுக்குள் இருக்கும் தேசிகன் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது.
இங்கு புற்றுக்கு பால் தெளிக்கும் பழக்கம் அல்லாமல், கோவில் பிராகாரத்திற்குள் இருக்கும் சேஷ தீர்த்தத்தில் தான் பால் தெளிக்கும் வழக்கமுள்ளது. இங்குள்ள சேஷ தீர்த்தம் நிவேதன்த்திர்க்கும், கருட தீர்த்தம் திருமஞ்சனதிர்க்கும் உபயோகபடுதப்பட்டு வருகிறது.
இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஹயக்ரீவர் நல்ல கல்வி அருளை வழங்குகிறார்.
உற்சவங்கள்:
புரட்டாசி மாதத்தில் மலை உற்சவமும், தீர்த்த வாரியும் தேசிகருக்கு நடை பெறுகிறது.
ஒவ்வொரு சித்திரை மாதத்திலும் தெய்வ நாயகருக்கு ப்ரஹ்மோத்ஸவம் நடை பெறுகிறது.
மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, பகல் பத்து மற்றும் இராப் பத்து உத்சவம் நடை பெறுகிறது.
மாசி மகத் திருவிழாவும் சிறப்பாக நடத்தப்படுகிறது.